![]() |
|||
|
|
அமர்நாத் விவகாரம் காஷ்மீரிகளின் நிலை என்ன? அன்சாரி
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதன் இறுதிக் கட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. எர்ரன் நாயுடு (தெலுங்கு தேசம்) அஸதுதீன் உவைஸி (எம்.ஐ.எம்.) உமர் அப்துல்லாஹ் (தேசிய மாநாடு) ஆகியோர் அவையின் கவனத்தை தங்கள் சூடான வாதங்களால் ஈர்த்தனர். காஷ்மீரில் கடைசி முஸ்லிம் இருக்கும் வரையில் அமர்நாத் யாத்திரை தொடரும் என உமர் அப்துல்லாஹ் உறுமியபோது நாடாளுமன்றமே ஆரவாரத்தால் அதிர்ந்தது. காஷ்மீரின் பண்பாட்டை அவர் உறுதிப்படுத்தி மீண்டும் தங்கள் பாரம்பர்யத்தை நினைவூட்டினார். ஆனால், காஷ்மீர் இன்று அனலில் தகிக்கிறது. பாதுகாப்பு (?) படைகள் சுட்டதில் ஹூரியத் தலைவர் ஷேக் அப்துல் அஜீஸ் உட்பட 17 பேர் உயிர் துறந்துள்ளனர். இந்துக்கள் கணிசமாக வசிக்கும் ஜம்முவில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பான 'அமர்நாத் யாத்ரா சங்கர் சமிதி' திட்டமிட்டு வன்முறையை ஊக்குவித்து வருகிறது. முஸ்லிம்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் காஷ்மீர் பள்ளத் தாக்கில் எதிரும் புதிருமான தலைவர் களும், மக்களும் ஓரணியில் திரண்டுள்ள னர். மிதவாதி என கருதப்படும் மீர்வாய்ஸ் உமர் பாரூக்கும், தீவிரப் போக்குடையவர் என கூறப்படும் கிலானியும் கரம் கோர்த்திருப்பதும், இவர்களுக்கு முப்தி முஹம்மதுலிவின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஷேக் அப்துல்லாஹ்வின் தேசிய மாநாடு கட்சியும் ஆதரவளிப்பது போன்ற சூழலும் காஷ்மீர் அரசியலில் முக்கியத் துவமான கட்டத்தை எடுத்துக் காட்டுகிறது. ஜம்முலிகாஷ்மீரில் அப்படி என்னதான் பிரச்சினை? அமர்நாத் யாத்திரையை காஷ்மீரிகள் எதிர்க்கிறார்களா? என்றால், இல்லை. மாறாக, தங்களில் மிச்சமிருக்கும் ஒரே சிறப்பு அம்ச உரிமையான இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் 370வது சட்டப் பிரிவுக்கு ஆபத்து வருமோ? என்ற அச்சம்தான் பிரச்சினை யின் ஆரம்ப புள்ளியாகும். காஷ்மீரிகளைத் தவிர வேறு யாரும் காஷ்மீரில் நிலம் வாங்க இச்சட்டப்பிரிவு தடை விதிக்கிறது. காரணம், பாலஸ் தீனத்தில் நிலத்தை விலைகொடுத்து வாங்கி, யூதர்கள் தனி நாட்டை உருவாக்கி, பாலஸ்தீனர்களை விரட்டியடித்தது போன்ற நிலை தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக காஷ்மீரிகளின் கோரிக்கையை இந்தியா ஏற்றது. முன்பு காஷ்மீரிக்கு இருந்த தனி பிரதமர், தனி கொடி போன்ற சிறப்பம் சங்கள் பின்னாளில் படிப்படியாக பறிக்கப்பட்டது. அதை எதிர்த்ததால் தான் 'காஷ்மீர் சிங்கம்' என புகழப்பெற்ற ஷேக் அப்துல்லாஹ்வை சிறையில் அடைத்தது இந்திய அரசு. இதையெல் லாம் இழந்து, இந்திய ஐக்கியத்தில் தங்களை இணைத்துக் கொண்ட காஷ்மீரிகளுக்கு ஒரே நம்பிக்கை யாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது இந்த 370வது சட்டப் பிரிவுதான். காஷ்மீர் பகுதியில் 12,799 அடி கடல் மட்டத்திற்கு மேலே இருக்கும் அமர் நாத்தில் உள்ள குகை கோயிலுக்கு இந்துக்கள் பல நூற்றாண்டுகளாகச் சென்று வருகிறார்கள். இதை காஷ்மீரி கள் எதிர்க்கவில்லை. இந்து யாத்ரீகர் களுக்கு 400 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரிகள் எல்லா ஒத்துழைப்பு களையும் நல்கி வருவது அனைவருக் கும் தெரியும். காஷ்மீரின் அரசியல் சிக்கலில் அமர்நாத் யாத்திரையை காஷ்மீரிகள் சர்ச்சையாக்கவில்லை. காஷ்மீர் அரசின் வனப்பகுதிக்கு சொந்தமாக 100 ஏக்கர் நிலத்தை அமர்நாத் யாத்ரீகர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்துகொடுக்க ஒதுக்கிய போதுதான், போதிய விளக்கங்களை அரசு தராத தால் இருதரப்பும் தவறாக விளங்கிக் கொண்டனர். காஷ்மீரிகள் மட்டுமே காஷ்மீரில் நிலம் வாங்க முடியும் என்ற தங்களின் உரிமைக்கு பங்கம் விளைவிக்க செய்யப்படும் 'சதியோ' என காஷ்மீரிகள் அச்சம் கொண்டனர். சாதாரணமாக நுழைந்து, பின்னர் இதையே முன்னு தாரணமாக்கி தங்களது மண்ணுரிமை பறிக்கப்பட்டு விடுமோ என அவர்கள் அஞ்சினர். காஷ்மீரிகளின் அச்சத்தை ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியத்தின் நிர்வாக அதிகாரி டாக்டர் அருண்குமார்தான் மேலும் பற்றியெரிய வைத்தவர். நிரந்தரமாக எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை, நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது என திமிர்த்தனமாகப் பேசியதுதான் காஷ்மீரிகளை கொந்தளிக்க வைத்துவிட்டது. தங்கள் சந்தேகம் சரியானது என அவர்கள் போராட்டத்தில் குதித்து விட்டனர். உடனே பாரதீய ஜனதா ஆதரவு அமைப்புகள்,இதை நாடாளு மன்ற தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்தனர். ஜம்மு பகுதியில் வாழும் மக்களைத் தூண்டிவிட்டதில் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம், அமர்நாத் யாத்ரா சங்கர் சமிதி போன்ற அமைப்புகள் பெரும் பங்காற்றின. காஷ்மீரில் இருக்கும் அமர்நாத் பகுதியில் இந்துக்களின் நகரமும், குடியிருப்புகளும் உருவாகப் போகின் றன என்ற பீதி காஷ்மீரிகளை ஆட்டிப் படைக்கிறது. இது ஒருவகையான ஆக்கிரமிப்பு முயற்சி என அவர்கள் கருதுகிறார்கள். எதிர்ப்புக்கு பயந்து அப்போது முதல்வராக இருந்து கடைசியில் இதற்காகவே ஆட்சியை இழந்த குலாம் நபி ஆசாத், நிலம் வழங்குவதை ரத்து செய்தது ஜம்மு பகுதி மக்களை கொந்தளிக்க வைத்துவிட்டது. குலாம் நபி ஆசாத், ஜம்முவில் பிறந்தவர். தனது செல்வாக்கை உயர்த்த அவர் அடித்த 'ஸ்டன்ட்' அவரை பாதித்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இப்போது காங்கிரஸின் வீழ்ச்சியை தங்களுக்கு சாதகமாக்கு வதற்கு பாஜக ஜம்மு பகுதியில் வாழும் மக்களைத் தூண்டி விடுகிறது. இன்று காஷ்மீர் உலக கவனத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டிருக்கிறது. இந்துக் கள் கணிசமாக வாழும் ஜம்மு, முஸ்லிம் கள் நிறைந்து வாழும் காஷ்மீர், புத்தர்கள் அதிகளவில் வாழும் லடாக் என மூன்றாகப் பிரிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வெடிக்கிறது. மூன்று இன மக்களும் கலந்து வாழும் தேசிய காஷ்மீர் என்ற மதச்சார்பற்ற சிந்தனையை முன்வைத்த மீர்வாயிஸ் உமர் பாரூக் மற்றும் ஜம்முலிகாஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற அமைப்பு கள்கூட, ஜம்முலிகாஷ்மீர் மூன்றாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு ஆதரவு தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன. காஷ்மீரோ மீண்டும் 1990லின் நிலைக்கு போய்விட்டதாக செய்தியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அரசியல்வாதிகளின் சுயநலம் அழகான காஷ்மீரை அமளிக் காடாக்கி இருக்கிறது. இதில் காஷ்மீரி களின் நியாயங்களும், உண்மைகளும் மறைக்கப்படுகின்றன. அமர்நாத் யாத்திரையை காஷ்மீரிகள் தடுக்கவில்லை. இந்து யாத்ரீகர்கள் அங்கே தற்காலிகமாக தங்குவதையும் எதிர்க்க வில்லை. தங்களுக்கு அரசியல் சாசன சட்டத்தின் 370வது பிரிவு தந்திருக்கும் மண்ணுரிமையை யாரும் பறிக்கக்கூடாது; பங்கு கேட்கக்கூடாது என்பதே அவர்கள் நிலை. இந்த உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்? |
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved. |
|||