|
பரமக்குடி மாணவர்
கொலை வழக்கை
சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
தமிழக முதல்வருக்கு தமுமுக தலைவர் கடிதம்!!
பரமக்குடி மாணவன் ராஜா மஸ்தான் கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம்
முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழக முதல்வருக்கு பின்வரும் கடிதத்தை
அனுப்பியுள்ளார்கள்.
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர்
டாக்டர் கலைஞர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை - 600 009.
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,
பொருள்: இராமநாதபுரம் மாவட்டம் - எமனேஸ்வரம்
மாணவன் படுகொலை - சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரியும் ஆய்வாளர் அழகு மீது
நடவடிக்கை எடுக்கக் கோரியும் - தொடர்பாக
-----

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரத்தைச் சேர்ந்த
14 வயது மாணவன் ராஜா மஸ்தான். பரமக்குடியில் உள்ள ஹைரத்துல் ஜமாலி கீழ
முஸ்லிம் மேனிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்த இந்த
மாணவனுக்கும் இதே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் முக்குலத்தோர்
சமுதாயத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் கார்மேகத்தின் பேத்தி
ராஜேஸ்வரிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இச்சூழலில் கடந்த செப்டம்பர்
18ம் தேதி மாணவன் ராஜா மஸ்தான் காணாமல் போயுள்ளான். செப்டம்பர் 20ம்
தேதி வைகை ஆற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் முழுவதும்
காயங்களுடன் ராஜா மஸ்தானின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

எமனேஸ்வரம் முஸ்லிம் ஜமாஅத்தினர், மாணவர் ராஜா மஸ்தான் அடித்து
கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளான் என்று சந்தேகப்படுகிறார்கள்.
இப்பிரச்சனையில் நீதி கோரி கடந்த செப்டம்பர் 23ம் தேதி அமைதிப்
பேரணியும் நடத்தியுள்ளார்கள். ஆனால் காவல்துறை, மாணவர் ராஜா மஸ்தான்
ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டான் என்று வழக்கை முடித்து
விட்டார்கள்.

ராஜா மஸ்தான் மரணம் தொடர்பாக ராமநாதபுரம் காவல்துறையின் செயற்பாடுகள்
குறிப்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பரமக்குடி காவல்
ஆய்வாளர் அழகு ஆகியோரின் நடவடிக்கைகள் சிறுபான்மை மக்களிடையே கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளனர். கொலையை தற்கொலையாக மாற்றி கார்மேகம்
உள்ளிட்டோரை காப்பாற்றும் வகையில் காவல்துறை செயல்பட்டு வருகின்றது
என்று ராமநாதபுரம் முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் கூறும்
காரணங்கள்:

1. சுமார் 20 நாட்களுக்கு முன்பு கார்மேகம், ராஜா மஸ்தானை தனது
கூலியாட்களை வைத்து கடுமையாகத் தாக்கி “பேத்தியுடன் பழகுவதை நிறுத்திக்
கொள், இல்லையேல் உன்னையும் உன் பெற்றோர்களையும் கொன்று விடுவோம்’’ என்று
மிரட்டியுள்ளார்.
2. செப்டம்பர் 18 அன்று ராஜா மஸ்தானைக் காணவில்லை என்று கார்மேகத்திடம்
தொலைபேசியில் கேட்டபோது, காவல்துறைக்கு போக வேண்டாம் என்று கார்மேகம்
கேட்டுக் கொண்டுள்ளார்.
3. ராஜா மஸ்தானைக் காணவில்லை என்றும், கார்மேகம் மீது சந்தேகம் உள்ளது
என்றும் எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த போது,
கார்மேகத்தின் பெயரை நீக்கி புகார் அளிக்க காவலர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.

4. பரமக்குடியில் வைகை ஆற்றில் ராஜா மஸ்தான் மூழ்கி இறந்தான் என்று
காவல்துறை கூறுகிறது. ஆனால் அந்த ஆற்றில் முழங்கால் அளவே தண்ணீர் ஓடும்
போது பையன் நீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை.
5. காவல்துறை கூறுவது போல் ராஜா மஸ்தான் தற்கொலை செய்து கொண்டிருந்தால்
தனது உடைகள் அனைத்தையும கழற்றிவிட்டு ஜட்டியுடன் மட்டும் தற்கொலை
செய்திருக்க மாட்டான்.
6. வைகை நகர் என்ற பகுதியில் குடியிருந்த ராஜா மஸ்தானின் வீட்டிற்கு
கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ள கருப்பணசாமி கோவில் எதிரில் உடைகள்
ஆற்றுப் படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்கு இம்மாணவன்
ஒருபோதும் குளிக்க சென்றதில்லை என்று அவனது பெற்றோர்கள் கூறுகிறார்கள்.
மேலும் மதியம் 2 மணிக்கு குளிக்கச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை என
அவர்கள் கூறுகிறார்கள்.

7. ராஜா மஸ்தான் தனது நண்பர்கள் ஆறு பேர்களுடன் ஆற்றில் குளிக்கச்
சென்ற போது அவன் மட்டும் மூழ்கி விட்டான் என்று காவல்துறை கூறுகின்றது.
ராஜா உண்மையில் மூழ்கியிருந்தால் சக மாணவர்கள் கூக்குரலிட்டிருப்பார்கள்.
ஆனால் சம்பவம் நடைபெற்று அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகு ஒரு
வாரம் கழித்து ஒன்று போல் இந்த 5 மாணவர்களும் காவல்துறையிடம்
வாக்குமூலம் அளித்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8. காவல்துறையினரால் ராஜா மஸ்தானுடன் குளிக்கச் சென்றவர்கள் என்று
காவல்துறை கூறும் 5 மாணவர்களில் ஒருவரான அஸ்லமின் பெற்றோர்
உயர்நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளனர். இறந்து போன மாணவரின் உடலை
மீண்டும் பிரேத பரிசோதனை செய்திட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
8. செப்டம்பர் 20 அன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கார்மேகத்தை ஆய்வாளர்
அழகு விசாரணை செய்த போது பிணம் கிடைத்து விட்டது என்ற தகவல்
ஆய்வாளருக்கு கிடைத்த உடன் கார்மேகத்தை விசாரணையிலிருந்து விடுவிக்க,
அவர் தலைமறைவாகி விட்டார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ராஜா மஸ்தான் இறப்பு தொடர்பாக
உண்மையான குற்றவாளிகளைத் தப்பவிட ராமநாதபுரம் காவல்துறை உதவி
செய்துள்ளது என்று அப்பகுதி முஸ்லிம்கள் பலமாக சந்தேகிக்கின்றார்கள்.
பரமக்குடி ஆய்வாளரின் நடவடிக்கைளும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தும்
வகையில் அமைந்துள்ளது. கடந்த 25ம் தேதி இரவு எமது கழகத்தின் ராமநாதபுரம்
(மத்தி) மாவட்டப் பொருளாளர் சல்மான் வீட்டை தாக்கியவர்கள் மீது வழக்குப்
பதிவு செய்ய ஆய்வாளர் மறுத்துள்ளார்.
ராமநாதபுரம் முஸ்லிம்களின் கோரிக்கை
1. மாணவர் ராஜா மஸ்தான் இறப்பு தொடர்பாக வழக்கு உடனடியாக சி.பி.சி.ஐ.டி.
பிரிவிற்கு மாற்றப்பட வேண்டும். சந்தேகத்திற்குரிய இந்த மரணத்திற்கு
காரணமாக இருந்த கார்மேகம் கைது செய்யப்பட வேண்டும்
2. ஆய்வாளர் அழகு உடனடியாக இடம் மாற்றம் செய்யப்படுவதுடன் அவர் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3. மாணவர் ராஜா மஸ்தான் இறப்பு குறித்து நீதி கேட்டு பேரணி ஆர்ப்பாட்டம்
நடத்திய எமனேஸ்வரம் ஜமாஅத் தலைவர்கள் மற்றும் தமுமுக உள்ளிட்ட அமைப்பு
தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட வேண்டும்.
இராமநாதபுரம் மாவட்ட மக்களின் இந்தக் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுமாறு
அன்புடன் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். |