|
ஒரிசாவில்
குடியரசுத் தலைவரின் ஆட்சியைக் கொண்டு வர காங்கிரஸ் தவறிவிட்டது!
தமுமுக தலைவர்
-புகாரியின் புதல்வன்

அனைத்து நாட்டு சமாதான நாளினை முன்னிட்டு கடந்த
செப்டம்பர் 21ஆம் நாளன்று சென்னை நுங்கம்பாக்கம் அய்கப் ஹவுஸில்
நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஏற்பாடு
செய்திருந்தது. இக்கூட்டத்திற்கு பி.யூ.சி.எல்லின் துணைத் தலைவர்
குறிஞ்சி தலைமை தாங்கினார்.
இலங்கையின் நாடாளுமன்ற (கொழும்பு) உறுப்பினர் மனோ கணேசன் `இலங்கையில்
மனித உரிமை’ என்கிற தலைப்பிலும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஹசன்
அலி `பயங்கரவாதம்’ என்கிற தலைப்பிலும், `நம்வாழ்வு’ வார இதழின் ஆசிரியர்
அருட்தந்தை ஆனந்த் `மதவெறி’ வன்முறை என்கிற தலைப்பிலும்
பத்திரிக்கையாளர் ஸ்ரீராம் `ஊடகமும் சமாதானமும்’ என்கிற தலைப்பிலும்
உரையாற்றினர்.
தமுமுக தலைவர் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் `காஷ்மீரில் அமைதி’
என்கிற தலைப்பில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்:
“இன்றைய தினம் இந்திய மக்களின் மத்தியில் காஷ்மீரில் நடைபெற்று
வருகின்ற பிரச்சனை பற்றிய விழிப்புணர்வு இருக்கின்றதா என்றால் இல்லை.
இதற்கு காரணம் செய்தி ஊடகங்களின் பாரபட்சமான நிலை தான்.
காஷ்மீர் என்பது ஒரு அழகிய பூமி. ஒரு இந்திய குடிமகன் என்கிற
அடிப்படையில் காஷ்மீர் இந்தியாவுடன் தான் இருக்க வேண்டும் என்கிற ஆசை
இருக்கிறது. அவ்வாறே எனக்கும் இருக்கிறது.
இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு. ஆனால் இத்தகைய ஜனநாயகம் காஷ்மீரில்
வாழக்கூடிய மக்களுக்கு இருக்கின்றதா என்பது அடிப்படைக் கேள்வி?
1947ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் சுதந்திரம்
அளிக்கப்பட்ட பொழுது மன்னர்கள் ஆண்ட சமஸ்தானங்களை பாகிஸ்தானுடன் இணைக்க
வேண்டுமா? அல்லது பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டுமா? என்ற பிரச்சனை
எழுந்தது. அப்பொழுது காஷ்மீர் மற்றும் சுனேதார் என்கிற இரண்டு
சமஸ்தானங்களில் தான் இந்த பிரச்சனை. முஸ்லிம்கள் பெருன்பான்மையாக
வாழக்கூடிய காஷ்மீரில் ஹரி சிங் என்ற இந்து மன்னர் ஆண்டு வந்தார்.
அதேசமயம் இந்துக்கள் பெருன்பான்மையாக வாழ்ந்து வந்த சுனேதாரில் ஆட்சி
புரிந்தவரோ ஒரு முஸ்லிம் நவாப். பூகோளத்தின் பிரகாரம் காஷ்மீரும் சரி,
சுனேதாரும் சரி இந்தியாவுடனும் இணையலாம். பாகிஸ்தானுடனும் இணையலாம்.
இந்நிலையில் இரண்டு சமஸ்தான மக்களிடமும் தாங்கள் எந்த நாட்டுடன் இணைய
விரும்புகிறீர்கள் என்று அவர்களின் விருப்பங்களை அறிவதற்கு மக்கள்
கருத்துக் கணிப்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மக்கள்
கருத்துக் கணிப்பு சுபேதாரில் மட்டுமே நடைபெற்றது. இதில் சுபேதார்
மக்கள் இந்தியாவுடன் இணைந்து கொள்வதாக பெரும்பான்மையாக வாக்களித்தனர்.
ஆனால் காஷ்மீர் மக்களுக்கு இந்த ஜனநாயக உரிமை அளிக்கப் படவில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான்அரசு காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக
தங்களின் படையை காஷ்மீருக்கு அனுப்பி வைத்தது. ஸ்ரீநகரை பாகிஸ்தான்
கைப்பற்றி விடும் என்ற நிலை உருவாகியதும், காஷ்மீரை ஆண்ட ஹரிசிங்
இந்திய அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். இந்தியாவின் ஒரு
பகுதியாக அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் காஷ்மீர் மாறுகிறது. அப்போது
இந்தியாவின் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் ஒரு வாக்குறுதியை
அளிக்கிறார். ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பியதும், காஷ்மீர் மக்களின்
எண்ணங்களை அறிவதற்கு மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என்று
காஷ்மீர் மக்களுக்கு மட்டுமின்றி, உலக மக்களுக்கே அளிக்க கூடிய
வாக்குறுதியாக அது அமைந்தது. இதே வாக்குறுதியை ஐ.நா அவையிலும் இந்தியா
அறிவித்தது. இதனால்தான் இன்று வரையிலும் ஐ.நா.வின் கண்காணிப்பு அலுவலகம்
காஷ்மீரில் இயங்கி வருகிறது. ஆனால் அந்த வாக்குறுதி இன்றுவரையிலும்
நிறைவேற்றப்பட வில்லை.
1951ஆம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் நியாமான முறையில்
நடைபெறவில்லை. அப்போது காஷ்மீரின் சிங்கம் என்று வர்ணிக்கப் படக்கூடிய
ஷேக் அப்துல்லாஹ்விற்காக அவரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைவரின்
வேட்பு மனுக்களும் புறக்கணிக்கப்பட்டது. தேர்தல் நடைபெற்ற 75
தொகுதிகளிலும் ஷேக் அப்துல்லாஹ்வும் அவரது ஆதரவாளர்களுமே வெற்றி
பெற்றார்கள். 1951லிருந்து நடைபெற்ற தேர்தல்களில் 1977, 1983, 2002ஆம்
ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைத் தவிர்த்து மற்ற அனைத்து தேர்தல்கள்
அனைத்துமே ஜனநாயக முறைப்படி நியாயமாக நடைபெறவே இல்லை. அப்போது
டெல்லியில் ஆட்சி புரிந்தவர்களின் விருப்பப்படியே நடைபெற்றது. இதனாலேயே
ஜனநாயகத்தின் பேரில் காஷ்மீர் மக்கள் முற்றிலுமாகவே நம்பிக்கை இழந்து
விட்டனர்.
பிரச்சனையே எங்கு வருகிறது என்றால், பயங்கவரவாதத்தின் ஊற்று எங்கிருந்து
கிளம்புகிறது என்றால் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதி அரசால்
நிறைவேற்றபடாதபோது அவர்கள் போராடும் நிலை உருவாகிறது. ஆயுதம் தூக்கும்
நிலை உருவாகிறது.
இங்கு 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.
அந்த தேர்தலில் போட்டியிட்டவர்தான் செய்யது சலாஹுத்தீன். இந்த
சலாஹுத்தீன் யார் தெரியுமா? இவருக்கு பெருன்பான்மையான ஆதரவு இருந்தும்
கூட அரசு நடத்திய தில்லுமுல்லுவினால் தோற்கடிக்கப்படுகிறார். ஆம் இனி
வாக்குச் சீட்டுகளை நம்பிக் கொண்டிருந்தால் காஷ்மீரில் ஜனநாயகம்
மலர்ந்து விடாது என்பதை உணர்ந்தவர்கள் ஆயுதங்களை தூக்கத்
தொடங்குகிறார்கள். ஹிஸ்புல்லாஹ் முஜாஹித்தீன் தலைவராக செய்யது
சலாஹுத்தீன் பின்னர் பரிணமிக்கிறார். ஆகவே பயங்கரவாதத்தை யார்
தோற்றுவிக்கிறார்கள் என்றால் அரசுகள் தான் தோற்றுவிக்கின்றன.
பயங்கரவாதம் தலைவிரித்து காஷ்மீரில் ஆடுவதற்கு காரணம் நமது
ஆட்சியாளர்களின் தவறுகளும் அவற்றுக்கு மூல ஊற்றாக இருக்கிறது.
காஷ்மீரில் நமது அரசு கையாண்ட தவறான அணுகுமுறையால் மாபெரும் விலையை நாம்
இன்று கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
காஷ்மீரில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க இந்து மக்கள் காலம் காலமாக
யாத்திரை செய்து வருகிறார்கள். இந்து முஸ்லிம்களுக்கு நல்லுணர்வை
வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்று வந்தது தான் அமர்நாத் யாத்திரை.
முதன்முதலில் இந்தப் பனி லிங்கத்தை 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
கண்டு பிடித்ததே ஒரு முஸ்லிம் ஆடு மேய்பவர் தான். அதிலிருந்து தொடங்கி
தலைமுறை தலைமுறையாக அந்த ஆடு மேய்ப்பவரின் குடும்பத்தினரும் கோவிலின்
பூசாரியும் இணைந்து கூட்டாக அமர்நாத் யாத்திரைக்குரிய ஏற்பாடுகளை காலம்
காலமாக செய்து வந்தனர். இந்நிலையில் வேண்டுமென்றே காங்கிரஸ் அரசாங்கம்
ஒரு குறிப்பிட்ட நிலத்தை அமர்நாத் கோவிலுக்கு அளிக்கிறது. இதற்கு
அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்தவுடனே அதனை வாபஸ் வாங்கியும் விடுகிறது.
இதனால் அங்கு மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது.
காங்கிரஸிற்கு முதுகெலும்பே கிடையாது. இன்று டெல்லியில் நடந்து
கொண்டிருப்பது காங்கிரஸ் ஆட்சியா அல்லது பிஜேபி ஆட்சியா என்றால் அதனை
மறைமுகமான பிஜேபி ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு பல உதாரணங்களை
சொல்ல முடியும்.
அன்று வாஜ்பேய் தலைமையிலான பி.ஜேபி. ஆட்சியின் போது குஜராத் பற்றி
எரிந்தபோது வாஜ்பாய் எவ்வாறு நடந்து கொண்டாரோ அது போன்று இன்று ஒரிசா
பற்றி எரியும் பொழுது காங்கிரஸ் அரசு மௌனம் காக்கிறது. அன்று வாஜ்பாய்
வேண்டுமானால் தனது கட்சியினர் பாதிக்கப்படுவர் என்றெண்ணி பயந்து
குஜராத்தில் அன்று குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த தயங்கி
இருக்கலாம். ஆனால் இன்றைய மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சி ஒரிசாவில்
குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த ஏன் பயந்து கொண்டிருக்கின்றது?
இது முதகெலும்பில்லாத அரசாங்கமா?
பிஜேபி இன்று தனது அரசியல் ஆதாயத்திற்காக காஷ்மீரில் பல பிரச்சனைகளை
எழுப்பிக் கொண்டிருக்கின்றது. அதற்கு ஒத்து ஊதக்கூடிய நிலையில்தான்
இன்று காங்கிரஸ் அரசாங்கம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. ஜம்முவில்
பிஜேபியின் ஆதரவுடன் நடைபெற்ற பொருளாதாரத் தடையை தகர்ப்பதற்கு காங்கிரஸ்
அரசிற்கு திராணி இல்லாமல் போனது. பொருளாதாரத் தடையினால் மருந்து
பொருட்களில் இருந்து உணவுப் பொருட்கள் வரை இருப்பு குறைந்ததால் காஷ்மீர்
மக்கள் முசாராபாத்திற்கு சென்றனர். முசாராபாத்திற்கு செல்ல காஷ்மீர்
மக்களைத் தூண்டியவர்கள் யார் என்றால் பி.ஜே.பி.யும், காங்கிரஸும்தான்.
அருந்ததிராய் கூறிய கருத்து இங்கே பொருத்தமானது. “காஷ்மீர் ஒரு அழகியப்
பெண். இந்தியாவும் அந்தப் பெண்ணை விரும்புகிறது, பாகிஸ்தானும்
விரும்புகிறது. ஆனால் அந்த காஷ்மீர் பெண்ணின் விருப்பத்தை முதலில்
அறிந்து நடந்து கொண்டால்தான் காஷ்மீரில் அமைதி நிலவும்" என்று
முடித்தார்.
இந்தக் கருத்தரங்கை வி.சுரேஷ், அருட்தந்தை ஹென்றி, டி.எஸ்.எஸ். மணி
ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
படங்கள்- உடந்தை ஷஃபி |